Posted in

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: உசிலம்பட்டியைத் தேர்வு செய்த முதல்வர் விஜய்—பின்னணியில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம்!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் புதுப்ப பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார். ரூ.755 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் தொடக்க விழாவிற்காக உசிலம்பட்டியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் மிக முக்கிய வரலாற்று மற்றும் சமூகக் காரணங்கள் அடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தென் தமிழகத்தில், குறிப்பாக மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ‘தாய்மாமன் சீர்’ அளிப்பது பாரம்பரியக் கலாச்சார வழக்கமாகும். அதேவேளையில், கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பெண் சிசுக்கொலைகள் பெருமளவில் பதிவாகிய வரலாற்றுப் பின்னணியும் உள்ளது. பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், பெண் சிசுக்கொலையை முற்றிலுமாக ஒழிக்கவுமே கடந்த 1990-களில் இங்கு ‘தொட்டில் குழந்தை திட்டம்’ போன்ற முக்கிய விழிப்புணர்வு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

அந்த சமூக வரலாற்றைக் கருத்தில் கொண்டு, பெண் குழந்தைகளின் பிறப்பைக் குடும்பத்தினரும் சமூகமும் பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே உசிலம்பட்டியைத் திட்டத் தொடக்க இடமாக முதல்வர் தேர்வு செய்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் அரசின் தாய்மாமன் அரவணைப்போடு வரவேற்பதன் மூலம், பெண் குழந்தை பாதுகாப்பையும் சமூக விழிப்புணர்வையும் மீண்டும் வலுவாக வலியுறுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

விழா ஏற்பாடுகள் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா ஐ.ஏ.எஸ் மற்றும் தென் மண்டல காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விழா மேடை, பாதுகாப்பு பெட்டகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு உசிலம்பட்டி மக்களிடையேயும் தென் மாவட்டப் பொதுமக்களிடையேயும் பெரும் நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.