Posted in

கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ‘வரம்பற்ற’ பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா, ரஷ்யாவிற்கு டிரம்ப் வைத்துள்ள பிரம்மாண்ட செக்!

ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள உலகளவில் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில், அமெரிக்காவிற்கு நிரந்தரப் பாதுகாப்புப் பொறுப்புகளை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய எதிரி நாடுகள் கிரீன்லாந்தில் ராணுவ முகாம்களை அமைக்கவோ, படைகளை அனுப்பவோ அல்லது உள்கட்டமைப்புகளில் முக்கிய முதலீடுகளைச் செய்யவோ முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இது காலக்கெடுவற்ற ‘வரம்பற்ற கால ஒப்பந்தம்’ (Infinite Life Agreement) என்றும், இதன் மூலம் கிரீன்லாந்தின் பாதுகாப்பைக் முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிற்குப் நிரந்தரமாகக் கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் வட அமெரிக்கப் பிராந்தியத்திற்கு எதிராக சீனா மற்றும் ரஷ்யா தொடுக்கக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த முடியும் என வாஷிங்டன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகி வரும் சூழலில், புதிய கடல்சார் வணிகப் பாதைகள் திறக்கப்படுவதோடு, கிரீன்லாந்தில் கொட்டிக்கிடக்கும் அரிய வகை கனிம வளங்களைக் (Rare Earth Minerals) கைப்பற்றவும் சர்வதேச நாடுகளிடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, சீனா ஆர்க்டிக் கடல் வழியே வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு சீனாவோ அல்லது ரஷ்யாவோ கால்பதிப்பதைத் தடுப்பதே டிரம்பின் இந்த அதிரடி ராஜதந்திர நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகவுள்ளது. அதேவேளையில், கிரீன்லாந்தின் சுயநிர்ணய உரிமையையும் டென்மார்க்கின் இறையாண்மையையும் பாதுகாக்கும் வகையிலேயே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ப்ரெட்ரிக் நீல்சன் ஆகியோர் கூட்டாக உறுதிப்படுத்தியுள்ளனர்.