மாலத்தீவில் உள்ள பிரபலமான பவளப்பாறை பகுதி ஒன்றில், 50 அடி (18 மீட்டர்) நீருக்கடியில் சீனாவைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரான சியாவோ டு (Xiao Du) என்பவர் தனது சக பயிற்றுவிப்பாளருடன் டைவிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வெளிநாட்டு முழ்காளர்கள் கொண்ட குழுவினர், சியாவோ டு மீது மோதி அவரைத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் ஒருவர் சியாவோ டுவின் முகமூடி மற்றும் சுவாசக் கருவியை (Regulator) பலவந்தமாகப் பறிக்க முயன்றது சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
நீருக்கடியில் கூட்டமாக இருந்த சூழலில், தனது தொழில்முறை பயிற்சியைக் கொண்டு சியாவோ டு நிதானமாகச் செயல்பட்டு அங்கிருந்து தப்பித்து நீர்மட்டத்திற்கு மேலெழுந்துள்ளார். உயிரைக் காக்கும் சுவாசக் கருவிகளை நீருக்கடியில் கழற்ற முயல்வது ஆபத்தான செயல் என்றும், இது கொடூரமான தாக்குதல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவத்தின் முழு காட்சிகளும் அவர் வைத்திருந்த 360 டிகிரி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த மாலத்தீவு சுற்றுலா அமைப்பான ‘மாலத்தீவ்ஸ் லெஜண்ட்’ (Maldives Legend) நிறுவனம், சம்மந்தப்பட்ட வழக்கில் உள்நாட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாதுகாப்பு விதிகளின்படி, இந்த மோதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் டைவிங் தொழில்முறை வழிகாட்டியின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சீனப் பயிற்சியாளர் சியாவோ டு இதுகுறித்து மாலத்தீவு காவல்துறையில் புகார் அளிக்கத் தீர்மானித்துள்ளார்.
மாலத்தீவு சுற்றுலாத்துறை மற்றும் கடல்சார் அதிகார அமைப்புகளும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தித் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.