Posted in

பிரிட்டன் வான்வெளியில் ‘ட்ரோன்’ தாக்குதல் அபாயம்? பாதுகாப்பு வல்லுநர்கள் விடுக்கும் பகீர் எச்சரிக்கை!

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போர்களில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பிரதான ஆயுதமாக உருவெடுத்துள்ள நிலையில், பிரிட்டன் வான்வெளியிலும் ட்ரோன்கள் மூலமாகப் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படலாம் எனப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனின் முக்கிய உள்கட்டமைப்புகள், ராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பகுதிகளை இலக்காகக் கொண்டு தற்கொலைப்படை (Kamikaze) ட்ரோன்கள் அல்லது நச்சுப் பொருட்களைச் சுமந்து செல்லும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் (MoD) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் முக்கியமான ராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பு முகாம்களுக்கு அருகே 2026 ஆகஸ்ட் வரையிலான ஓராண்டில் மட்டும் 340-க்கும் மேற்பட்ட ஆளில்லா ட்ரோன்கள் அத்துமீறிப் பறந்த பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டில் 126 ஆகவும், 2025-இல் 250 ஆகவும் இருந்த இந்த எண்ணிக்கை தற்போது கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளதால், பிரிட்டன் பாதுகாப்புப் படையினர் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் ராணுவ கேப்டனுமான டோபியாஸ் எல்வுட் இது குறித்துப் பேசுகையில், “பிரிட்டனில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை எதிரி நாடுகள் இலக்காகக் கொண்டு கண்காணித்து வருகின்றன” என்று குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் பிரிட்டன் வான்வெளியில் இதுபோன்ற ஆளில்லா ட்ரோன்களை இயக்கி உளவு பார்ப்பதாகவும், தற்போதைக்கு வெறும் கண்காணிப்பாக இருக்கும் இந்த ட்ரோன்களில் வெடிபொருட்களைப் பொருத்தித் தாக்குதல் நடத்த அதிக நேரம் ஆகாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பிரிட்டன் அரசு ட்ரோன் எதிர்ப்புத் தொழில் நுட்பங்களுக்காகச் சுமார் 790 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ₹8,500 கோடி) நிதி ஒதுக்கி, ராணுவ தளங்களைச் சுற்றி வான்வெளித் தடைகளை விதித்துள்ளது. எனினும், பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் பிரிட்டன் ட்ரோன் தாக்குதல்களைத் தடுப்பதில் இன்னும் போதிய முன்னேற்றம் அடையவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வான்வெளிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.