பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான கத்ரீனா கைஃப், பிரசவத்திற்குப் பிறகு உடல் எடைக் கூடியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் உருவக் கேலி (Body Shaming) செய்த பாகிஸ்தானைச் சேர்ந்த ரேடியோ ஆர்.ஜே மற்றும் இன்ஃப்ளூயன்ஸரான டாக்டர் எஜாஸ் வாரிஸ் (Dr Ejaz Waris), தனது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். பிக் பாஸ் 20 (Bigg Boss 20) நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் இணையதள உருவக் கேலியாளர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மன்னிப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி குடும்பத்து விநாயகர் சதுர்த்தி விழாவில் தனது கணவர் விக்கி கௌஷலுடன் கலந்துகொண்ட கத்ரீனா கைஃபின் தோற்றத்தைக் விமர்சித்து, பாகிஸ்தான் ஆர்.ஜே எஜாஸ் வாரிஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த கத்ரீனாவின் பிரசவத்திற்குப் பிந்தைய உடல் எடையைக் கேலி செய்யும் வகையில் அமைந்த அந்த வீடியோவிற்குப் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பாகிஸ்தான் நடிகர் அலி ஜாஃபர் உட்படப் பலரும் இந்த பாடி ஷேமிங் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்தான், ‘பிக் பாஸ் 20’ வார இறுதி அத்தியாயத்தில் பேசிய சல்மான் கான், பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும் என்பதைக் கூடப் புரிந்துகொள்ளாமல் ஆன்லைனில் கேலி செய்பவர்களைக் கடுமையாகச் சாடினார். “திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கும்போது நடிகைகள் மீண்டும் தங்களின் பழைய உடலமைப்பைப் பெற்றுவிடுவார்கள்; சமூக வலைதளங்களில் முகம் தெரியாத கணக்குகளை வைத்துக்கொண்டு மற்றவர்களின் உருவத்தைக் கேலி செய்து பணம் சம்பாதிப்பது அருவருப்பானது” என்று சல்மான் கொந்தளித்தார்.
சல்மான் கானின் இந்த எச்சரிக்கை வீடியோவைக் கண்ட பாகிஸ்தான் ஆர்.ஜே எஜாஸ் வாரிஸ், உடனடியாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் பதிவு மூலம் மன்னிப்பு கோரினார். “சல்மான் கான் பேசிய பிறகே எனது வார்த்தைகள் கத்ரீனா கைஃபையும் அவரது ரசிகர்களையும் எந்தளவுக்குக் காயப்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்தேன். கத்ரீனாவை உருவக் கேலி செய்வது எனது நோக்கமல்ல; வீடியோவின் கவன ஈர்ப்புக்காகவே விளையாட்டாகப் பேசினேன். எனது வார்த்தைகளுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.