Posted in

கோவையில் பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் ஊழல்: அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவு!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு கடந்த ஆட்சியின் போது ரூ.40 கோடி மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் ‘அகல்விளக்கு’ என்ற பெயரிலான பதிப்பகத்தின் கீழ் 1,800 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் பல போலியான தரவுகள் மற்றும் பொய்யான பன்னாட்டு தர புத்தக எண்களைக் (ISBN) கொண்டுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் இலக்கியத் துறையில் 40 ஆண்டுகள் இயங்கி வரும் தமக்கே இப்படியொரு பதிப்பகம் குறித்துத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளித் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கீழடி தொடர்பான புத்தகங்களில் இணையப் படங்கள் பயன்படுத்தப்பட்டது உட்படப் பல தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புத்தகக் கொள்முதல் கடந்த ஜனவரி மாதமே முடிவடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், புத்தகங்களின் தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். மேலும், தவறுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியல், ஒப்பந்த விவரங்கள் மற்றும் நிதிய ஒதுக்கீடு ஆகியவை முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.