தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழக (RIMS) அரசு மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (SNCU) திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. குளிரூட்டி (AC) சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டு இத்தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை இரவு சுமார் 11.50 மணியளவில் குழந்தைகள் வார்டில் இருந்த ஏசி சாதனத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வெடித்ததில், முழுப் பிரிவும் அடர்ந்த புகையால் சூழப்பட்டது. இதனால் அங்குப் பராமரிக்கப்பட்டு வந்த பச்சங் குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுப் பெரும் பதற்றம் நிலவியது. மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகக் கண்ணாடிகளை உடைத்தும், மின் இணைப்பைத் துண்டித்தும் குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் இச்சோடா பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவரின் 5 நாட்களேயான பச்சங் குழந்தை சம்பவ இடத்திலேயே புகையினால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், மீட்கப்பட்டுத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தீவிர சிகிச்சையில் இருந்த மற்றொரு குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வார்டில் இருந்த எஞ்சிய 26-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவசர அவசரமாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்திற்குத் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாகக் கூறிய அவர், இத்தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த குழந்தைகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு தணிக்கையைத் தீவிரப்படுத்தவும் ஆணையிட்டுள்ளார்.