தமிழக முதல்வரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் சமீபத்தில் புழல் மத்திய சிறைச்சாலைக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டதன் பின்னணியில் ஜோதிடப் பரிகாரங்கள் இருப்பதாகப் பரவி வரும் வதந்திகள் குறித்துக் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக விமர்சித்துள்ளார். “ஜோசியர் சொல்வதைக் கேட்டு நடப்பதற்குப் பதிலாக அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்” என அவர் நையாண்டியாகப் பேசியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் புழல் மத்திய சிறை வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். எனினும், அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விஜய்யின் இந்தச் சிறை விஜயம் ஒரு ‘ரகசிய ஜோதிடப் பரிகாரம்’ என்றும், வரவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரச் சவால்களில் இருந்து தப்பிக்கவே அவர் சிறை வளாகத்திற்குச் சென்று வந்ததாகவும் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இச்செய்திகள் குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஒரு நாட்டின் முதலமைச்சராக இருப்பவர் மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும். அதைவிட்டு விட்டு, ஜோசியர் சொன்னார் என்பதற்காகச் சிறைச்சாலைக்குச் செல்வதும், பரிகாரங்கள் செய்வதும் நகைச்சுவையாக இருக்கிறது. ஜோசியர் சொல்வதையெல்லாம் அப்படியே செய்வதாக இருந்தால், பேசாமல் அந்த ஜோசியரையே கொண்டு வந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துவிடலாம் அல்லவா?” எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய சீமான், தவெக அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், ஆன்மீக மற்றும் ஜோதிட நம்பிக்கைகளை வைத்து அரசியல் நடத்துவது மக்கள் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் குறிப்பிட்டார். சீமானின் இந்த அதிரடி மற்றும் நகைச்சுவையான பேச்சு, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே புதிய கருத்து மோதல்களை உருவாகியுள்ளதுடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது.