Posted in

மாணவர்களுடன் அமர்ந்து சூடான பொங்கல் சாப்பிட்ட முதலமைச்சர் விஜய்: நெகிழ்ச்சியூட்டும் காட்சி!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்’ விரிவாக்கத் தொடக்க விழாவில் பங்கேற்றத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பள்ளி மாணவர்களுக்குச் சூடான வெண் பொங்கல், சாம்பார் மற்றும் இனிப்புகளைத் தன் கைகளால் பரிமாறியதுடன், அவர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்து காலை உணவை உண்டு மகிழ்ந்தார். சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் வைரலாகி வருகின்றன.

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில், 6 முதல் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். உணவருந்தும் கூடத்திற்குச் சென்ற முதலமைச்சர், வரிசையில் காத்திருந்த குட்டிச் சுட்டிகளுக்கு அன்போடு உணவைப் பரிமாறினார். உணவைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

பரிமாறும் பணி நிறைவடைந்ததும், ஏழாம் வகுப்பு மாணவி தார்ஷினி உள்ளிட்ட மாணவர்களுடன் ஒரே வரிசையில் தரைப்பாயில் அமர்ந்து முதலமைச்சர் விஜய் பொங்கல் உண்டார். உணவருந்தத் தொடங்கும் முன்பாக அம்மாணவி செய்த வழிபாட்டுப் பிரார்த்தனை முடியும் வரை பொறுமையுடன் காத்திருந்து அவருடன் உரையாடிய முதலமைச்சர், மாணவர்களின் படிப்பைப் பற்றியும், உணவு சுவையாக இருக்கிறதா என்றும் கனிவோடு கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த எளிமையான அணுகுமுறை மாணவர்களையும் ஆசிரியர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உணவருந்தியப் பின்னர் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், மாணவர்களின் கற்றல் திறன்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 15,454 பள்ளிகளைச் சேர்ந்த 15.30 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடையவுள்ளனர். முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் தலைமைச் செயலக மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.