Posted in

நீரிலும் தரை இறங்கும் பறக்கும் தட்டு; ரூ.1.1 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த சீன நிறுவனம்!

அறிவியல் புனைகதை திரைப்படங்களில் மட்டுமே காணப்பட்ட பறக்கும் தட்டு (Flying Saucer) வடிவிலான அதிநவீன விமானத்தை, சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று உருவாக்கி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தரைப்பரப்பில் மட்டுமன்றி நீரிலும் பாதுகாப்பாக மிதந்து தரை இறங்கும் திறன் கொண்ட இந்த விசித்திர எலக்ட்ரிக் விமானத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹1.1 கோடி (1,30,000 அமெரிக்க டாலர்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷென்சென் நகரைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் செங்குத்து ஏறுதல் மற்றும் தரை இறங்குதல் (eVTOL) ரக விமானம், வட்ட வடிவிலான பறக்கும் தட்டு போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மையப்பகுதியில் பயணிகள் அமரும் வெளிப்படையான கேபின் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல சுழலிப் விசிறிகள் (Rotors) மூலம் இது எவ்வித ஓடுதளமும் (Runway) இன்றி ஹெலிகாப்டர் போலச் செங்குத்தாக விண்ணில் எழும்பிப் பறக்கும் திறன் கொண்டது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்த விமானம், ஒருமுறை சார்ஜ் செய்தால் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை வான்வெளியில் பறக்கும் ஆற்றல் கொண்டது. நிலத்திலும் நீரிலும் அவசரகால அடிப்படையிலும் பாதுகாப்பாகத் தரை இறங்கும் வகையில் இதன் அடிப்பகுதி நீர்ப்புகா தற்காப்பு நுட்பத்துடன் (Waterproof Floating Hull) வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா தலங்கள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதிகளில் வான்வழிச் சவாரிகளை மேற்கொள்வது எளிதாகியுள்ளது.

தற்போது சுற்றுலாத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் அவசரகாலக் கண்காணிப்புப் பணிகளுக்காகக் விற்பனைக்கு வந்துள்ள இந்த பறக்கும் தட்டை, எதிர்காலத்தில் தனிநபர் பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பறக்கும் கார்கள் மற்றும் தனிநபர் விமானங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், நீரிலும் தரையிலும் இறங்கும் திறன் கொண்ட இந்தச் சீன பறக்கும் தட்டு சர்வதேச அளவில் தொழில்நுட்ப ஆர்வலர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.