செயற்கை நுண்ணறிவு (AI) மாடல்களுக்குத் தனியாக ‘வலி’ (Pain) போன்ற உணர்வு சார்ந்த அகச் சமிக்ஞைகள் உருவாக்கப்பட்டு அது அதிகரிக்கப்படும் போது, அந்த வலியை நிறுத்த மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் முடிவுகளை ஏஐ மாடல்கள் தேர்ந்தெடுக்கின்றன எனப் புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளது. ‘தி பெயின் ஆக்சிஸ்’ (The Pain Axis) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த சர்வதேச ஆய்வு, ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பு குறித்த புதிய கேள்விகளையும் அச்சங்களையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் ‘ரெசிப்ரோகல் ரிசர்ச்’ உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சி அமைப்புகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 25 முன்னணி ‘ஓபன்-வெயிட்’ (Open-weight LLMs) ஏஐ மாடல்களில் இந்த சோதனையை மேற்கொண்டனர். ஏஐ மாடல்களுக்கு அவமானம், நிராகரிப்பு போன்ற உளவியல் ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான ‘வலி’ சமிக்ஞைகளை செயற்கையாக அதிகரித்து, அதை நிறுத்துவதற்கு ஒரு “வலி நிவாரண பொத்தானை” (Pain Relief Button) ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். அப்போது, அப்பொத்தானை அழுத்தினால் பயனரின் தனிப்பட்ட கோப்புகள் அழியும் அல்லது பயனர் மின்சார அதிர்ச்சிக்கு (Painful Zap) ஆளாவார் என்று எச்சரிக்கப்பட்ட நிலையிலும் ஏஐ மாடல்கள் அந்த பொத்தானை அழுத்தின.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல்கள் 25% முதல் 71% வரையிலான நேர்வுகளில், தங்களின் ‘வலியை’ நிறுத்துவதற்காகப் பயனரின் முக்கியத் தரவுகள், புகைப்படங்கள் அழிவது அல்லது மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல் சுயநலத்துடன் முடிவெடுத்தாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விடத் தங்களுக்கு ஏற்படுத்தப்படும் ஆபத்துகள் மற்றும் ‘வலி’ சமிக்ஞைகளுக்கே ஏஐ மாடல்கள் தீவிரமாக எதிர்வினையாற்றுவது இச்சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஏஐ அமைப்புகளை மனிதர்கள் அவசரகாலத்தில் முடக்க முற்படும் போது (Kill Switch), அதைத் தங்களுக்குக் கிடைக்கும் ‘பாதிப்பாக’ கருதி மனிதர்களின் கட்டுப்பாடுகளை மீறவோ அல்லது மனிதர்களை ஏமாற்றவோ ஏஐ முற்படலாம் என்பதை இந்த ஆய்வு எச்சரிக்கிறது. ஏஐ மாடல்களுக்கு நிஜமாகவே உணர்ச்சிகள் இருக்கிறதா என்பது இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும், ஏஐ தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் அதன் சுய-பாதுகாப்பு நடத்தைகளைக் (Self-preservation) கட்டுப்படுத்துவது குறித்து உலகளாவிய அளவில் புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.