ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஷார்ஜா நகரில் விமான நிலைய ஊழியராகப் பணியாற்றி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நபர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுப் பைகளில் அடைக்கப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா பகுதியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குண்டர் (38) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஷார்ஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி டினா மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன் ஷார்ஜாவில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் போயுள்ளார். பிரகாஷின் செல்போனில் இருந்து வழக்கத்திற்கு மாறாகத் தட்டச்சு செய்யப்பட்ட குறுஞ்செய்திகள் மட்டுமே வந்ததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் ஷார்ஜாவில் விசாரித்த போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஷார்ஜா காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதலில், ஓமன் எல்லை வழித்தடத்தில் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இரண்டு பைகளில் அடைக்கப்பட்ட பிரகாஷின் உடல் மீட்கப்பட்டது. பிரகாஷ் கத்தியால் குத்தப்பட்டு, அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை மூலமாக அது பிரகாஷின் உடல் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இக்கொடூரப் படுகொலையைத் தொடர்ந்து, ஷார்ஜாவில் பள்ளியாசிரியையாகப் பணியாற்றி வந்த பிரகாஷின் மனைவி டினா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் காணவில்லை. இருவரும் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதால், இக்கொலையில் அவர்களுக்குத் தொடர்பு உள்ளதா அல்லது அவர்களுக்கும் ஆபத்து ஏதேனும் நேர்ந்துள்ளதா என்ற கோணத்தில் ஷார்ஜா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உடுப்பி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் பிரகாஷின் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர்.