சென்னையில் தேசியப் பழங்குடியினர் ஆணையம் (NCST) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் வகையில் தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்காததால், ஆத்திரமடைந்த ஆணையத் தலைவர் கூட்டத்தைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தேசியப் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய ஆய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழங்குடியின மக்களின் அரசியலமைப்புப் பாதுகாப்பு, மத்திய அரசின் நலத்திட்டங்கள் செயலாக்கம் மற்றும் உரிமைகள் மீறல் தொடர்பான புகார்களை ஆய்வு செய்ய, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைமை இயக்குநர் (DGP), வனத்துறைச் செயலாளர் மற்றும் துறை சார்ந்த முதன்மைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டம் தொடங்குவதற்கு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தந்த நிலையில், தமிழகச் தலைமைச் செயலாளரோ அல்லது டிஜிபியோ கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. உயர்கல்வித் துறைச் செயலாளர் உள்ளிட்ட 6 துறைச் செயலாளர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், “முக்கிய அதிகாரிகள் எங்கே?” என ஆணைய உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, அதிகாரிகள் அனைவரும் முதலமைச்சரின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த தேசியப் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், “மாநில அதிகாரிகளின் வருகைக்காக மத்திய ஆணையம் காத்திருக்க முடியாது” எனக்கூறி கூட்டத்தை உடனடியாக முடிப்பதாக (Wind Up) அறிவித்தார். தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் நிலைமையை எடுத்துக்கூறிச் சமாதானப்படுத்த முயன்றும், அதனை ஏற்க மறுத்த ஆணையத் தலைவர் நேராக டெல்லிக்குச் சென்றுவிட்டார். மத்திய அரசியல் அமைப்பின் கீழ் இயங்கும் ஆணையத்தைப் புறக்கணித்த விவகாரம் டெல்லி உயர் மட்டத்தில் எதிரொலித்துள்ளதால், எதிர்காலத்தில் தமிழக அரசுக்கு இது தேவையற்ற நிர்வாக அழுத்தங்களை உருவாக்கக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.