ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது, இஸ்ரேலிய தூதர் டேனி டானோன் (Danny Danon) ஈரானிய பிரதிநிதியை அணுகி, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சாதனத்தை வழங்கி உரையாட முயன்ற சம்பவமும், அதனை ஈரானிய அதிகாரி முற்றிலும் புறக்கணித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானில் நிலவும் இணையக் கட்டுப்பாடுகளை மக்கள் முறியடிக்க ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் உதவும் எனக் கூறி அந்தச் சாதனத்தைக் காண்பித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலிய தூதர் டேனி டானோன், நெதன்யாகு பயன்படுத்திய அதே ஸ்டார்லிங்க் சாதனத்தைக் கையில் ஏந்தியபடி ஈரானிய தூதர் நாசர் அசாடியை (Nasser Asadi) நோக்கி நேரில் சென்று பேசினார்.
ஈரானிய தூதரிடம் அந்தச் சாதனத்தை நீட்டிய டானோன், “ஈரானிய மக்கள் தங்களின் சுதந்திரத்தைப் பெற இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத் தெஹ்ரானுக்கு எடுத்துச் சென்று அவர்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் ஈரானிய மக்களை நேசிக்கிறோம், அங்கு ஆட்சி மாற்றம் வரப் பிரார்த்திக்கிறோம்” என்று கூறினார். ஆனால், இஸ்ரேல் தூதரின் இந்த அதிரடி நகர்வைக் கண்டுகொள்ளாத ஈரானிய அதிகாரி, எவ்வித பதிலும் அளிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு அவரை முற்றிலும் புறக்கணித்தார்.
இந்த சுவாரசியமான உரையாடலின் வீடியோவை தூதர் டேனி டானோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது சர்வதேச அளவில் வைரலாகி விவாதங்களை எழுப்பியுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் உச்சத்தில் உள்ள சூழலில், ஐநா அவையில் இடம்பெற்ற இந்த ‘ஸ்டார்லிங்க்’ மோதல் சம்பவம் தூதரக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.