Posted in

சொந்த அக்காவின் மகளைக் கொலை செய்தாரா ஹிட்லர்? – 95 ஆண்டுகளுக்குப் பின் வெளியான புதிய ஆவணங்கள்!

ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் 23 வயதான மருமகள் (அக்காவின் மகள்) கெலி ரௌபல் (Geli Raubal) கடந்த 1931-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், ஹிட்லர் வழங்கிய பொய் சாட்சியத்தை உடைக்கும் புதிய வரலாற்று ஆவணங்கள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியூனிச் நகரில் உள்ள ஹிட்லரின் வீட்டின் பூட்டிய அறைக்குள் 1931 செப்டம்பர் 19 அன்று கெலி ரௌபல், ஹிட்லரின் துப்பாக்கியால் நெஞ்சில் சுடப்பட்டு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இச்சம்பவம் தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஹிட்லருக்கும் அவரது மருமகளுக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், கெலியை ஹிட்லர் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தகவல்கள் உலா வந்த சூழலில், இக்கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் நியூரம்பெர்க் நகரில் இருந்ததாக ஹிட்லர் ஆலிபி (Alibi) சாட்சியம் அளித்திருந்தார்.

ஆனால், ஜெர்மன் வரலாற்று ஆய்வாளர் ஹரால்ட் சாண்ட்னர் (Harald Sandner) மியூனிச் காப்பகங்களில் இருந்து கண்டெடுத்துள்ள புதிய இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, கெலியின் உடல் செப்டம்பர் 18-ஆம் தேதி காலை 10:15 மணிக்கே கண்டெடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், காவல்துறை அறிக்கையில் கூறப்பட்ட நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே கெலி உயிரிழந்ததும், அந்த நேரத்தில் ஹிட்லர் மியூனிச் நகரிலேயே தங்கியிருந்ததும் அம்பலமாகியுள்ளது.

ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றுவதற்காகக் காவல் துறையில் இருந்த நாஜி ஆதரவாளர்கள் இறப்பு நேரத்தைப் பொய் பதிவாக மாற்றியிருக்கலாம் என்றும், கெலியின் உடலுக்குப் பிரேதப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை என்றும் ஆய்வாளர் சாண்ட்னர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிட்லர் தனது சொந்தக் கரங்களால் நேரடியாகச் செய்த ஒரே கொலை இதுவாகத்தான் இருக்கும் எனக் வரலாற்று அறிஞர்கள் சந்தேகிக்கும் நிலையில், இப்புதிய ஆவணங்கள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால வரலாற்று மர்மத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன.