பாரதிய ஜனசங்கத் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா பூங்காவில் நடைபெற்ற ‘பஜன் கிளப்பிங்’ (Bhajan Clubbing) இசை நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பக்தர்களுடன் இணைந்து பக்திப் பாடல்களை ரசித்தார்.
இளம் தலைமுறையினரிடையே பக்திப் பாடல்களை நவீன இசை வடிவில் கொண்டு சேர்க்கும் விதமாக உருவான ‘பஜன் கிளப்பிங்’ கலாச்சாரம் சமீபகாலமாக இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தலைமையகத்திற்கு எதிரே உள்ள பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவி ஆடை அணிந்த இளைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் மேடையில் ராக் இசை பாணியில் பஜனைகளைப் பாடினர்.
முன்னணி வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, இளம் தலைமுறையினரின் பக்தி இசையைத் தாளமிட்டு ரசித்து உற்சாகப்படுத்தினார். வெள்ளைக் குர்தா மற்றும் ஆரஞ்சு நிறக் கோட் அணிந்து எளிமையாகக் காட்சிளித்த பிரதமர், பாடல்களுக்கு ஏற்பக் கைதட்டி இளைஞர்களை ஊக்கப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, “சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் மனிதனின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற ‘அந்தியோதயா’ தத்துவத்தை தந்தவர் தீன்தயாள்” எனப் புகழாரம் சூட்டினார். பாரம்பரியத்தையும் நவீனத்துவத்தையும் இணைக்கும் இந்த ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி டெல்லி மக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.