Posted in

பஞ்சாப் தனியார் பல்கலைக்கழகத்தில் விடிய விடிய பயங்கர வன்முறை! வதந்தியால் வளாகத்தை அடித்து நொறுக்கிய மாணவர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு விடிய விடிய பயங்கரப் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபக்வாரா அருகே அமைந்துள்ள எல்.பி.யு (Lovely Professional University) வளாகத்தில், மாணவி ஒருவருக்குப் பாலியல் அநீதி இழைக்கப்பட்டதாக நள்ளிரவில் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளிலிருந்து வெளியேறி, நள்ளிரவு 2 மணி அளவில் பல்கலைக்கழகப் முதன்மை வாயில் முன்பாகப் பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரம் செல்லச் செல்லப் போராட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், அலங்காரப் தொட்டிகள், கட்டிடப் பகுதிகள் மற்றும் வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அதிரடித் தாக்குதல் நடத்தினர். மேலும், ஜலந்தர் – ஃபக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தகவலறிந்து கபூர்தலா காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் (SSP) தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்துப் பேசிய காவல்துறையினர், பாலியல் வன்கொடுமை தொடர்பாக இதுவரை எந்தப் புகாரோ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை என்றும், இது முற்றிலும் பரப்பப்பட்ட வதந்தி என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். போலி வதந்திகளைப் பரப்பி அமைதியைக் குலைக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் எச்சரித்துள்ளது.