சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று புதிய வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 26.1 கிலோமீட்டர் நீளமுள்ள நான்காவது வழித்தடத்தில் தண்டவாளம் அமைத்தல், மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் பொருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வழித்தடத்தில் 9 சுரங்கப்பாதை ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சாலைப் போக்குவரத்து மூலம் பூந்தமல்லியிலிருந்து கலங்கரை விளக்கம் செல்ல சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் நிலையில், இந்த மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வந்தால் வெறும் 25 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் பெரும் நேரச் சேமிப்பை வழங்குவதோடு, சாலைப் போக்குவரத்து நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர்மட்டப் பாதையில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சுரங்கப்பாதை மற்றும் நிலையப் பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.