தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘கிட்னி தெரு’ (Kidney Street) என அழைக்கப்படும் ஃபர்ஹாங் ஹொசைனி (Farhang Hosseini) தெருவில் உள்ள சுவர்கள் மற்றும் கட்டிடங்களில் சிறுநீரகம், கல்லீரல் திசுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை ஆகியவற்றை விற்பனை செய்வதற்கான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஈரானின் தொழிலாளர் செய்தி நிறுவனமான ILNA நவம்பர் 11-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த வருமானம் மற்றும் கடன்களால் அவதிப்படும் தொழிலாளர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வீடுகளைத் தக்கவைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனம் மற்றும் மருத்துவ மையத்திற்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால், உறுப்புகளை வாங்க வருபவர்களைத் தேடிப் பலர் இங்கு கூடுகின்றனர்.
சத்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், பொதுவாக ஒரு சிறுநீரகத்திற்கு 30 முதல் 40 பில்லியன் ரியால்கள் ($11,500 முதல் $15,300 வரை) கேட்கப்படுவதாகவும், அரிய வகை ரத்தப் பிரிவுகளுக்கு 50 பில்லியன் ரியால்கள் ($19,200) வரை விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் உள்நாட்டுப் பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தற்காலிகப் பணத் தேவையைப் பூர்த்தி செய்தாலும், அது தொழிலாளர்களின் உடல்நலத்தையும் எதிர்காலத்தில் உழைக்கும் திறனையும் பாதிக்கும் என ILNA செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தற்போது இரானில் பொருளாதார அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.