அமெரிக்கா மீண்டும் தன் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்தால், இதுவரை கண்டிராத “ரகசிய மற்றும் ஆச்சரியமூட்டும்” புதிய அணு/தொழில்நுட்ப ஆயுதங்கள் மூலம் அமெரிக்கப் படைகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரழிவை உண்டாக்குவோம் என்று ஈரான் ஆயுதப் படைகளின் தலைமை மையம் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபுல்ஃபாசல் ஷேகர்ச்சி மற்றும் முகமது அக்ரமீனியா ஆகியோர் அரசு ஊடகங்களுக்கு அதிரடிப் பேட்டியளித்தனர். அதில், “அமெரிக்காவின் எவ்வித புதிய தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான் முப்படைகளும் உச்சகட்டத் தயார்நிலையில் உள்ளன. இந்த முறை எதிரிகள் நினைத்துப் பார்க்க முடியாத புதிய ராணுவத் தொழில்நுட்பங்களை நாங்கள் களமிறக்குவோம்” எனத் தெரிவித்தனர்.
தங்களது சமச்சீரற்ற போர்க்கலை (Asymmetric Warfare) மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் இலக்குகளைச் சீர்குலைக்கும் மின்சாரப் போர் சாதனங்கள் (Electronic Warfare Systems) முந்தைய மோதல்களை விட தற்போது பலமடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் போர் நாவாய்கள் அனைத்தும் தங்களின் புதிய இலக்குகளாக மாறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகப் பொருளாதாரத்தின் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மையமாகக் கொண்டு பேசிய ஈரான் அதிகாரிகள், “ஈரான் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாவிட்டால், வேறு எந்த நாட்டின் கப்பல்களும் இந்த வழியை அமைதியாகப் பயன்படுத்த முடியாது” எனத் தெளிவுபடுத்தினர். அமெரிக்கா உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளதாக வெளிவந்த தகவல்களைத் தொடர்ந்து, ஈரானின் இந்த மிரட்டல் அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.