சென்னை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றிய ஏ. அருண் ஐபிஎஸ் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ‘காத்திருப்போர் பட்டியலுக்கு’ (Compulsory Wait / Waiting List) மாற்றப்பட்டது அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இப்பட்டியல் குறித்தும் அவருக்கு இருக்கும் தற்போதைய அதிகாரங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
அரசு நிர்வாகத்தில் ‘காத்திருப்போர் பட்டியல்’ என்பது ஒரு சிவில் சர்வீஸ் (IAS/IPS) அதிகாரிக்கு உடனடிப் பணிப்பொறுப்பு அல்லது துறை ஒதுக்கீடு செய்யப்படாத ஒரு இடைக்கால நிலையாகும். ஒரு குறிப்பிட்ட பதவியிலிருந்து விடுவிக்கப்படும் அதிகாரிக்கு அடுத்தகட்ட பொறுப்பு அறிவிக்கப்படும் வரை, அவர் எந்தவொரு துறை சார்ந்த முடிவுகளையும் எடுக்கவோ அல்லது களப் பணிகளில் ஈடுபடவோ முடியாது. இருப்பினும், இக்காலகட்டத்தில் அவர்கள் தொடர்ந்து அரசு அதிகாரியாகவே நீடிப்பார்கள்.
எனவே, தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏ. அருண் ஐபிஎஸ்-க்கு எந்தவொரு காவல் துறை சரகமோ, மண்டலமோ அல்லது சிறப்புப் பிரிவோ கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் வழக்கமான காவல் துறை அதிகாரங்கள், வழக்கு விசாரணை உத்தரவுகள், அதிகாரிகளுக்கு ஆணையிடுதல் போன்ற நேரடி நிருவாக அதிகாரங்கள் எதுவுமே தற்சமயம் அவர் கையில் இருக்காது. இருப்பினும், தங்களது பதவிகளுக்குரிய அடிப்படை ஊதியம் மற்றும் படிகளை அவர் தொடர்ந்து பெறத் தகுதியுடையவர் ஆவார்.
பொதுவாக நிருவாகக் காரணங்கள், மூத்த அதிகாரிகளின் இடமாற்றம், சட்ட ஒழுங்கு சிக்கல்கள் அல்லது துறை சார்ந்த விசாரணைகள் நிலுவையில் இருக்கும்போது மூத்த அதிகாரிகள் இத்தகைய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவது வழக்கமான நடைமுறையாகும். தலைமைச் செயலக உள்துறை அனுமதி மற்றும் அரசின் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை அருண் ஐபிஎஸ் எந்தவொரு அதிகாரப்பூர்வப் பணிப் பொறுப்பையும் ஏற்க முடியாது என்பது குறிப்பிடத்தகது.