Posted in

அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்: எகிப்து 3 முறை கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை!

2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு நடத்திய மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பாக, அது குறித்து எகிப்து நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவர் அப்பாஸ் காமல், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்குக் தொலைபேசி மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் 3 முறை கனிசமான எச்சரிக்கைகளை விடுத்தும், அவர் அதனை முற்றிலும் அலட்சியப்படுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) புதிய விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அந்த அறிக்கையின்படி, எகிப்து உளவுத்துறை தலைவர் அப்பாஸ் காமல் 2023 செப்டம்பரில் இஸ்ரேலுக்கு நேரில் ரகசிய விஜயம் மேற்கொண்டு, காசாவில் நிலைமை மோசமடைந்து வருவதாகவும், எந்நேரமும் அது பெரிய அளவில் வெடிக்கக்கூடும் என்றும் முதல் எச்சரிக்கையை வழங்கினார். ஆனால், “நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது” எனக்கூறி இஸ்ரேல் அதிகாரிகள் அதனை நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவும், அதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவும் எகிப்து உளவுத்துறைத் தலைவர் நேதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு “பெரிய அளவிலான தாக்குதல் திட்டம்” குறித்து எச்சரித்துள்ளார். எனினும், தாக்குதலின் துல்லியமான நேரம் மற்றும் முறை குறித்த விவரங்கள் இல்லையென்ற காரணத்தைக் கூறி, இஸ்ரேலியப் பிரதமர் அலுவலகமும் ராணுவ அமைப்புகளும் இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளத் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எகிப்து மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபரும் தாக்குதலுக்கு முன்பு நேதன்யாகுவை எச்சரித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமக்கு உளவுத்துறையிடமிருந்து முன்னெச்சரிக்கைகள் எதுவுமே வரவில்லை என நேதன்யாகு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்த வெளிப்படையான தகவல்கள் இஸ்ரேல் அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்பாக வெளியான இந்த அறிக்கை, நேதன்யாகுவின் ஆட்சியதிகாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.