Posted in

ரூப்பூர் அணுமின் நிலையம்: ரஷ்ய விமானத்திற்கு பாகிஸ்தான் வான்வெளி அனுமதி மறுப்பு!

வங்கதேசத்தில் கட்டப்பட்டு வரும் ரூப்பூர் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவிற்கான யுரேனியம் அணு எரிபொருளை ரஷ்யாவில் இருந்து ஏற்றிவந்த சரக்கு விமானத்திற்குத் பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. வங்கதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பாகிர் மஹ்பூப் அனம் அளித்த தகவலின்படி, செப்டம்பர் 24 அன்று தாகா சென்றடைய வேண்டிய இந்த விமானம் பாகிஸ்தான் வான்வெளி அனுமதி கிடைக்காததால் திட்டமிட்டபடி வந்து சேரவில்லை. அனுமதி மறுக்கப்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ (Rosatom) நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன் வங்கதேசத்தின் முதல் அணுமின் நிலையமான ரூப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 2,400 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த திட்டத்தின் முதல் பிரிவிற்கான அணு எரிபொருள் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கதேசத்தைச் சென்றடைந்தது. தற்போது இரண்டாவது பிரிவிற்கான எரிபொருள் கொண்டுவரப்படும் சூழலில் இந்த வான்வெளிப் பிரச்சனை உருவெடுத்துள்ளது.

விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதிலும், ரஷ்ய நிறுவன அதிகாரிகளின் தகவலின் பேரில் வருகை ஒத்திவைக்கப்பட்டதாக வங்கதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஷேக் முகமது தவ்ஹீதுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தொழில்நுட்பக் காரணங்கள் மற்றும் வான்வெளி அனுமதி தொடர்பான நடைமுறைகள் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வான்வெளிப் பிரச்சனைகளைத் தொடர்ந்து, மாற்றுப் பாதையில் அணு எரிபொருளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்த யுரேனியம் எரிபொருள் வங்கதேசத்தைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.