ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ‘டுப்போலேவ் 95’ (Tu-95) ரகப் போர்க்கப்பல் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் வசிக்காத பகுதியில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 7 பேரில் ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைங்கா விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த குண்டுவீச்சு விமானம், கிராஸ்னோயாரோவோ கிராமத்திற்கு அருகில் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்தின் போது விமானத்தில் எவ்வித ஆயுதங்களோ அல்லது வெடிமருந்துகளோ ஏற்றப்பட்டிருக்கவில்லை என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று ரஷ்ய டெலிகிராம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்த துல்லியமான காரணத்தைக் கண்டறிய ரஷ்ய விமானப் படையின் நிபுணர் குழு உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அணுஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ‘டுப்போலேவ் 95’ ரக விமானங்கள் ரஷ்யப் படைப்பிரிவில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ஆகும். இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் சேகரித்து வருகின்றன.
தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர். காயமடைந்த ஒரே ஒரு வீரருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயர் மட்ட விசாரணையின் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.