Posted in

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து பெண் அதிகாரி விலகல்!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரிக்கத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநரால் அமைக்கப்பட்ட அனைத்து பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவிலிருந்து (SIT) சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் வி.வி. கீதாஞ்சலி விலக விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் இந்த விசாரணையிலிருந்துத் தன்னை விடுவிக்குமாறு கோரி அதிகாரப்பூர்வமாகக் கடிதம் வழங்கியுள்ளார்.

கூடுதல் காவல் ஆணையர் பி.சி. தேன்மொழி தலைமையிலான இந்தக் குழுவில், இணை ஆணையர் திஷா மிட்டல், எஸ்பி முத்துராசி ஆகியோருடன் துணை ஆணையர் கீதாஞ்சலியும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டிருந்தார். முன்னதாக இந்த விவகாரத்தைக் கையாண்ட மத்திய குற்றப்பிரிவு மற்றும் வழக்கைக் கண்காணித்த உயரதிகாரிகளுடன் தான் ஏற்கனவே பணியாற்றியுள்ளதாலும், தன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாலும், தனிப்பட்ட காரணங்களைக் சுட்டிக்காட்டியும் இந்த விசாரணைக் குழுவிலிருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்ட் 29 அன்று வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இரண்டாவது போக்சோ வழக்கும் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. அதேவேளையில், வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளின் பிணை மனுக்கள் மீதான தீர்ப்பைப் போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தற்போது துணை ஆணையர் கீதாஞ்சலி விலகல் கோரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாகச் சென்னை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கீதா சிறப்பு புலனாய்வுக் குழுவில் சேர்க்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழு தனது விசாரணையைத் தீவிரப்படுத்தி விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறது.