Posted in

புடின் ரகசிய அணுசக்தி பங்கர்: ‘டெட் ஹேண்ட்’ அமைப்புடன் இயங்கும் ‘ஆப்ஜெக்ட் 1335’!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்து அணுசக்திப் போரை வழிநடத்தக் கூடிய ‘ஆப்ஜெக்ட் 1335’ என்ற ரகசிய அணுசக்தி நிலத்தடி பங்கரைப் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 800 மைல் தொலைவில் உள்ள கொஸ்வின்ஸ்கி காமென் மலையடியாரத்தில் இந்த நிலத்தடி கட்டமைப்பு அமைந்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் அணுசக்தித் தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் தலைமை மற்றும் தகவல் தொடர்பு மையங்களை அழித்தாலும், தானாகவே பதிலடி கொடுக்கும் ‘டெட் ஹேண்ட்’ (Perimeter/Dead Hand) அமைப்படன் இந்த பங்கர் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இந்த மையத்தில் நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு முதல் இது தனது போர்ப் பணியைத் தொடங்கியுள்ளதாக ஓய்வுபெற்ற ரஷ்ய மேஜர் ஜெனரல் வி.ஜி. காலின் தெரிவித்துள்ளது.

இந்த நிலத்தடி வளாகத்தில் சுரங்கப் பாதைகள், ரேடியோ மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா தனது அணுசக்தி தற்காப்பு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துவதாக டேன்வாட்ச் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இந்த ரகசிய அணுசக்தி தளத்தின் புகைப்படங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த விவரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்யாவின் இந்த நகர்வு, மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு அணுசக்தி தற்காப்பு மூலம் பதிலடி கொடுக்கும் வியூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.