மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க ராணுவம் தனது 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பல் படையை அப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறது. ‘யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் சுமார் 9,000 முதல் 10,000 படைவீரர்களுடன் மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டுள்ளது. அமெரிக்கக் மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கட்டுப்பாட்டு எல்லைக்குள் இந்த போர்க்கப்பல் தளம் அமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் இந்த ராணுவ நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. “ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும், அவர்கள் அணுஆயுதம் பெறுவதை 100 சதவீதம் மக்கள் எதிர்க்கின்றனர்” என்று அதிபர் டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்’ உள்ளிட்ட போர்க்கப்பல்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வருகை அமெரிக்காவின் ராணுவ பலத்தை கணிசமாக அதிகரிக்கும்.
அமெரிக்காவில் விரைவில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை தீவிரப்படுத்தி வருகிறது. அதேவேளையில், ஈரானும் எந்தவொரு புதிய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் மாத இறுதிக்குள் இந்த 3-வது போர்க்கப்பல் படை மத்திய கிழக்குக் கடற்பகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.