Posted in

சிறையில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டாரா? தடயவியல் நிபுணர் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் சிறைச்சாலையில் 2019-ஆம் ஆண்டு உயிரிழந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பிரபல தடயவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் மைக்கேல் ஃப்ரீமேன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (நவம்பர் 16) லண்டனில் உள்ள மிடில் டெம்பிள் (Middle Temple) சட்ட அமைப்பில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்ட அவர், எப்ஸ்டீனின் உடற்கூராய்வு ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை ஓராண்டாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

எப்ஸ்டீனின் சகோதரர் மார்க் வழங்கிய உடற்கூராய்வு கோப்புகள் மற்றும் முப்பரிமாண மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில், அவரது கழுத்தில் இருந்த காயங்கள் தற்கொலைக்குப் பொருந்தவில்லை என ஃப்ரீமேன் குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்ஸ்டீனின் இடது தோள்பட்டை மற்றும் முதுகில் இருந்த காயங்களும், கழுத்துத் தடத்திற்கு மேலே காணப்பட்ட நகக்கீறல்களும் பின்புறமாக இருந்து துணியால் கழுத்து நெரிக்கப்பட்டதையும், அவர் தப்பிக்கப் போராடியதையும் காட்டுவதாக அவர் பிபிசி மற்றும் சிபிஎஸ் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தார்.

எனினும், 2019 ஆகஸ்ட் மாதம் எப்ஸ்டீன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்த நியூயார்க் நகர தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகம், தங்களது முந்தைய முடிவில் உறுதியாக இருப்பதாக சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. முன்னதாக அமெரிக்க நீதித்துறையின் விசாரணையிலும் எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டதாகவே உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தப் புதிய தடயவியல் ஆய்வு மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

தனது இந்த ஆய்வுக் கட்டுரையை அறிவியல் ஆய்விதழில் வெளியிடச் செய்த முயற்சி நிராகரிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பேராசிரியர் ஃப்ரீமேன் கூறியுள்ளார். எப்ஸ்டீன் மரணம் தொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகள் இதுவரை மாற்றப்படாத நிலையில், தடயவியல் நிபுணரின் இந்தப் புதிய கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன.