ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆளுங்கட்சியான ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், உக்ரைன் போரின் முடிவிற்கும் ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் தாயகம் திரும்புவதற்கும் தயாராக இருக்குமாறு ரஷ்ய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) அறிவுறுத்தியுள்ளது. மாஸ்கோவிற்கு வெளியே உள்ள செனெஜ் (Senezh) மேலாண்மைப் பயிற்சி மையத்தில் கடந்த நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மூடிய அறை கருத்தரங்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகமான ‘வேடோமோஸ்டி’ (Vedomosti) செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் நிர்வாகத்தின் முதல் துணைத் தலைவர் செர்ஜி கிரியென்கோ பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், போர்க்களத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ‘வெற்றியுடன்’ ஒரே நேரத்தில் திரும்பும்போது ஏற்படும் சூழலை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் வீரர்களுடன் இப்போதிலிருந்தே நெருக்கமாகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கிரியென்கோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் தாங்கள் போர்க்காலச் சூழலிலேயே பணியாற்றுகிறோம் என்பதை எம்.பி-க்கள் மறந்துவிடக் கூடாது என்றும், சண்டை முடியும் வரை ஓய்வெடுக்கவோ சொகுசாக வாழவோ அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் கிரெம்ளின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். போருக்குப் பிந்தைய சூழலைக் கையாள்வதுடன், 2030 அதிபர் தேர்தல் மற்றும் 2031 நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான அரசியல் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்த சில நாட்களில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், போர் எப்போது முடிவுக்கு வரும் அல்லது படைவீரர்கள் திரும்புவதற்கான திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் இந்தக் கூட்டத்தில் வெளியிடப்படவில்லை.