பிரிட்டனை எதிரி நாடுகளின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக ‘பிரிட்டானியா ஷீல்டு’ (Britannia Shield) எனும் £10 பில்லியன் (சுமார் 10,000 கோடி பவுண்டுகள்) மதிப்பிலான புதிய ஏவுகணை தடுப்பு அமைப்பை உருவாக்கக் கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டுள்ளது. நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரான கெமி பேடனோக் இந்த பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தார். இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) அமைப்பைப் போன்று பிரிட்டனிலும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு கட்டமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் £10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அதிநவீன ரேடார், கட்டளை கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் எதிரி ஏவுகணைகளை நடுவானில் அழிக்கும் இடைமறிப்பு அமைப்புகள் (Interceptors) நிறுவப்பட உள்ளன. பிரிட்டனின் முக்கிய நகரங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளங்களைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். லேபர் கட்சி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பிற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் நலத்திட்டங்களுக்கு அதிக நிதி செலவிடுவதாகக் கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மாநாட்டில் பேசிய கெமி பேடனோக், “ஐரோப்பாவிற்கு மீண்டும் போர் வந்துவிட்டது, ட்ரோன்களும் ஏவுகணைகளும் நவீன போரை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. பிரிட்டன் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் கார்ட்லிட்ஜ் இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், இத்தகைய பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப் பல பில்லியன் பவுண்டுகள் கூடுதல் செலவாகும் எனப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆளும் லேபர் கட்சி நிர்வாகம் நாட்டின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டங்களில் தாமதம் காட்டி வருவதாகக் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. வரவிருக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் இத்திட்டம் உடனடியாகச் செயல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி உறுதியளித்துள்ளது. பிரிட்டனின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரூ.10 பில்லியன் திட்டம் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.