செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) தவெக கட்சியின் ‘விசில்’ சின்னத்திற்கு நேராக இருந்த பொத்தானில் கறுப்பு மை பூசப்பட்டிருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. காலை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தண்டரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் இதைக் கண்டறிந்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உட்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 285 வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரின் ‘விசில்’ சின்னத்திற்கு எதிரே இருந்த நீல நிறப் பொத்தானில் கறுப்பு மை பூசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் தவெக முகவர்களும் வாக்காளர்களும் வாக்குச்சாவடி மையத்தில் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் விரைந்து சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இந்தச் செயல் தற்செயலாக நடந்ததா அல்லது யாரேனும் திட்டமிட்டுச் சதி செய்ய மை பூசினார்களா என்பது குறித்துத் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உடனடியாக அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக மாற்று EVM இயந்திரம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டுச் சரிபார்க்கப்பட்ட பின்னரே மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்படும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு மையத்தில் ஏற்பட்ட இந்தச் சலசலப்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.