Posted in

பிரான்சில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்: 6,000 பேர் கைது, பலர் காயம்!

பிரான்ஸ் நாட்டில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கட்டமைப்பு வசதிக்குறைபாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு பிரான்சின் லென்ஸ் நகரில் உள்ள ஆகஸ்ட்-பெஹால் பள்ளி அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையின் ஸ்டன் கிரனேட் வெடித்ததில் 15 வயது மாணவர் ஒருவர் தனது கையை இழந்துள்ளதாக ‘லா வாய்ஸ் டு நோர்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரப்பர் குண்டுகள் பாய்ந்ததில் 16 வயது மாணவர் ஒருவருக்குப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், போராட்டக்களத்தில் வீசப்பட்ட பொருட்களால் 85 ஆசிரியர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டோர் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் 2,000-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்கள் முற்றுகையிடப்பட்டதால் கல்வி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்முறையை சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரெஞ்சு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் நிலவரம் குறித்து ஆலோசிக்க அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அமைதியான முறையில் கலந்துரையாடலைத் தொடங்கி மாணவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.