கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகத் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் உள்ள நகைக் கடை உரிமையாளர்களிடம் கர்நாடக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த நகைக் கடை விற்பனையாளர்கள் சங்கத்தினர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தின் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் முழுபாகிலு காவல் எல்லைக்கு உட்பட்ட வீடுகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கொள்ளை வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவரைக் கர்நாடகக் காவல் துறையினர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, கொள்ளையடிக்கப்பட்ட 600 கிராம் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை நாட்றம்பள்ளியில் உள்ள மூன்று நகைக் கடைகளில் விற்பனை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முழுபாகிலு காவல் ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட கர்நாடகக் காவல்துறையினர் நாட்றம்பள்ளிக்கு விரைந்து வந்து சம்பந்தப்பட்ட மூன்று நகைக் கடை உரிமையாளர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். நகைக் கடை உரிமையாளர்களிடம் அண்டை மாநிலக் காவல் துறையினர் விசாரணை நடத்துவதை அறிந்த நகைக் கடை வியாபாரிகள் உடனடியாகக் காவல் நிலையத்தின் முன் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் உண்மையில் அந்த நகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதா அல்லது வேறு எங்காவது விற்கப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் கர்நாடகக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நாட்றம்பள்ளி உள்ளூர் காவல் துறையினரும் நிலைமையைக் கண்காணித்து மேல்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.