தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பி. சத்தியபாமா குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் தவெக மகளிர் அணியினர் புகார் அளித்துள்ளனர். திருச்சியில் உள்ள முக்கியக் காவல் நிலையங்களில் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் உருவம் மற்றும் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய கருத்துகள் உருவக்கேலி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மு.க. ஸ்டாலினின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம், மாநில காவல் தலைமை இயக்குநர் (DGP) மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளிடமும் தவெக சார்பாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவரின் இந்த பேச்சுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தவெக மகளிர் அணியினர் தொடர் போராட்டங்களிலும் புகார் அளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்புகார்கள் மீது காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.