சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர் தரப்பினர் சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பகிர்ந்து வந்தனர். குறிப்பாக, “சிவகங்கையே சிவப்பாக மாறும்” என்ற வாசகங்களுடன் பகிரங்க மிரட்டல் விடுக்கும் காணொளிகள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகின. இத்தகைய ரீல்ஸ்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியதால் சிவகங்கை மாவட்டக் காவல்துறை இதில் உடனடியாகத் தலையிட்டது.
வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் பதிவிட்ட நபர்களைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர்கள் மீது சட்டப்பூர்வமான வழக்குகளைப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட்டுள்ளனர். மேலும், இக்கொலை வழக்கில் இதுவரை 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வன்முறையைப் பரப்பிய 77 சமூக வலைதளக் கணக்குகளைக் காவல்துறை முடக்கியுள்ளது.
சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் வன்முறை மற்றும் மிரட்டல் பதிவுகளைப் பரப்புவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தற்போது சிவகங்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தொடர்கின்றன.