Posted in

குள்ள மனித உருவ மாயத்தோற்றம்: சீனா, பிலிப்பைன்ஸில் ஒரே காளானால் விளைந்த விசித்திரம்!

யூட்டா பல்கலைக்கழக (University of Utah) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பூஞ்சை இயல் வல்லுநர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், ‘லான்மாஓவா ஆசியாட்டிகா’ (Lanmaoa asiatica) என்ற காளான் இனமே இத்தகைய விசித்திர அனுபவத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு சீனா மற்றும் பிலிப்பைன்ஸின் கார்டில்லெரா பிராந்திய மக்கள் இந்தக் காளானைச் சாப்பிட்ட பிறகு, கண்ணெதிரே நூற்றுக்கணக்கான சிறிய மனிதர்கள் நடப்பது போன்ற மாயத்தோற்றங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர்.

மரபணுப் பரிசோதனைகள் (DNA sequencing) மூலம், சீனாவில் ‘ஜியான் ஷோ சிங்க்’ (Jian shou qing) என்றும் பிலிப்பைன்ஸில் ‘செடஸ்டெம்’ (Sedesdem) என்றும் அழைக்கப்படும் இந்தக் காளான்கள் இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பலரும் கலாச்சார ரீதியாக வேறுபட்டிருந்தாலும் ஒரே விதமான உருவங்களைக் கண்டதால், இது மனரீதியான கற்பனையல்ல என்றும் காளானில் உள்ள அறியப்படாத இரசாயனக் காரணியே காரணம் என்றும் ஆய்வாளர் கொலின் டாம்னவர் (Colin Domnauer) தெரிவித்துள்ளார்.

வழக்கமான போதை காளான்களில் காணப்படும் வேதிப்பொருட்கள் இதில் இல்லை என்பதால், மனித மூளையைப் பாதிக்கும் புதிய வகை வேதிப்பொருள் இதில் இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பெனிசிலின் போன்ற மருந்துகளும் பூஞ்சையிலிருந்தே கண்டறியப்பட்டதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காளான்களில் உள்ள இந்த புதிய இரசாயனக் கூட்டுப் பொருளைப் பிரித்தெடுத்து ஆய்வு செய்யும் பணிகள் தற்போது உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மூளை நரம்பியல் மற்றும் மனநல மருத்துவப் பிரிவில் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த ஆய்வு பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.