பிரிட்டன் மற்றும் அயர்லாந்துப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடும் சேதத்தை ஏற்படுத்திய போலோ புயல் நகர்ந்துள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேலும் ஒரு தீவிரப் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலோ புயல் காரணமாக வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையால் மரங்கள் சாய்ந்ததோடு, நாட்டின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக நிகழ்ந்த விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நிலைமை சீரடைவதற்குள் அடுத்த வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி தீவிரமடைந்து ‘குளோ’ (Storm Chloe) என்ற பெயரில் புதிய புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக ஸ்காட்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பெய்த தொடர் மழையால் நிலம் ஈரப்பதத்துடனும் நதிகள் நிரம்பிய நிலையிலும் உள்ளதால், புதிய புயலால் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.