Posted in

கூடுவாஞ்சேரி – ஆவடி புதிய ரயில் பாதை திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார்!

சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளை விரைவாக இணைக்கவும் ஆவடி – திருபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் பாதை திட்டம் திட்டமிடப்பட்டது. 58 கிலோமீட்டர் தொலைவிலான இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்கான மதிப்பீடு சுமார் ரூ.3,136 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கூடுவாஞ்சேரி – திருபெரும்புதூர் – இருங்காட்டுக்கோட்டை இடையிலான 33.78 கி.மீ தொலைவிற்கான திட்ட அறிக்கை ரூ.945 கோடி மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் பாதையானது ஆவடி, வயலாநல்லூர், திருமழிசை, தண்டலம், திருபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், நட்டாரசன்பேட்டை வழியாக கூடுவாஞ்சேரியை சென்றடையும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காகப் தனியார், அரசு மற்றும் வனத்துறை நிலங்கள் என மொத்தம் சுமார் 229 முதல் 300 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த வழித்தடம், வரவிருக்கும் பரந்தூர் இரண்டாவது விமான நிலையத்திற்கும் எளிதான இணைப்பை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து பணிகள் தொடங்கப்பட்டால், சுமார் 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது சென்னை வெளிவட்டச் சாலையின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் மீது ரயில்வே வாரியம் மற்றும் மத்திய அரசின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கப்படுகிறது.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.