உக்ரைன் ராணுவம் வானிலை பலூன்கள் (Weather balloons) மூலம் கமிகேஸ் ட்ரோன்களை ஏவி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த புதுமையான வான்வழித் தாக்குதல் காரணமாக மாஸ்கோவில் உள்ள வ்னுகோவோ (Vnukovo), டோமோடேடோவோ (Domodedovo) மற்றும் ஷெரெமெட்டியேவோ (Sheremetyevo) ஆகிய முக்கிய விமான நிலையங்களின் விமானங்கள் தரைையிறங்குவதிலும் புறப்படுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வான்வழித் தடுப்பு அமைப்புகளை திசைதிருப்பும் நோக்கில், உக்ரைன் தரப்பில் இருந்து சிறிய மற்றும் பெரிய அளவிலான பலூன்களில் வெடிபொருட்கள் மற்றும் ட்ரோன்கள் இணைத்து அனுப்பப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பலூன்கள் மூலமாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை குழப்பத்தில் ஆழ்த்தி, ட்ரோன்களை இலக்குகளை நோக்கி எளிதாக அனுப்ப உக்ரைன் முயன்றதாக ராணுவ பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும் மாஸ்கோவை நோக்கிப் பறந்து வந்த 26-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ரஷிய விமானப் போக்குவரத்து முகமை பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்து, விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தலைநகரை நோக்கிய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பயணிகள் பல மணிநேரம் காத்திருக்கும் சூழல் உருவானதுடன், வான் பாதுகாப்பு கண்காணிப்பும் பல மடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் உக்ரைனின் இந்த புதிய உத்தி ரஷ்ய பாதுகாப்பு படையினருக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக வான் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது விமான நிலையங்களில் நிலவிய தற்காலிகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விமானங்கள் படிப்படியாக வழக்கம் போல இயங்கத் தொடங்கியுள்ளன.
விண்ணில் பறந்து வரும் சந்தேகத்திற்குரிய பலூன்களைக் கண்டறிந்து அளிப்பதற்கான சிறப்பு வான் பாதுகாப்புப் படைகளை ரஷ்யா எல்லையோரப் பகுதிகளில் பணியமர்த்தியுள்ளது.