பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினர் மீது எரிகுண்டுகள் (Petrol Bomb) வீசப்பட்டன. இதில் காவலர் ஒருவரின் சீருடையில் தீப்பற்றி அவர் எரியும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியாகின. இச்சம்பவத்தில் காயமடைந்த அதிகாரி இரண்டாம் நிலைத் தீக்காயங்களுடன் (Second-degree burns) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தாக்குதல் குறித்துப் பிரான்ஸ் அரசு வழக்கறிஞர்கள் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இப்போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறையில் 15-க்கும் மேற்பட்ட கெண்டார்ம்கள் (Gendarmes) மற்றும் காவலர்கள் எரிகுண்டு மற்றும் கற்களால் தாக்கப்பட்டதுடன், பிரான்ஸ் முழுவதும் 166 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரண்ட் நுனேஸ் (Laurent Nuñez), போராட்டக்காரர்களின் வன்முறை மிகவும் அசாதாரணமான அளவை எட்டியுள்ளது எனக் கண்டித்துள்ளார். அதேவேளையில் தீவிர வலதுசாரித் தலைவரான மரீன் லெ பென் (Marine Le Pen), பாதுகாப்புப் படையினர் மீதான இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தற்போது பாரிஸ் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத சூழலில், வன்முறை நடந்த பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.