Posted in

லண்டன் ஆக்ஸ்போர்டு வீதியில் சைக்கிள் குழுக்கள் அத்துமீறல்: போக்குவரத்து இல்லாத மண்டலத்தில் குழப்பம்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற வணிகப் பகுதியான ஆக்ஸ்போர்டு வீதியை (Oxford Street) நடைபாதையாக மாற்றும் வகையில், அங்கு வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் இயங்குவதற்கு லண்டன் மேயர் சாதிக் கான் தலைமையிலான நிர்வாகம் அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில், சைக்கிள் ஓட்டுவதற்கான தடையை எதிர்த்து ‘கிரிட்டிகல் மாஸ்’ (Critical Mass) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சைக்கிள் ஓட்டுநர்கள் அக்குழுவாக திரண்டு ஆக்ஸ்போர்டு வீதியில் அத்துமீறிப் படையெடுத்தனர்.

வணிக வளாகங்களுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் நடைபயணிகள் மத்தியில் சைக்கிள் ஓட்டுநர்கள் அதிவேகமாகச் சென்றதோடு, போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்டனர். சில இடங்களில் வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டதால் அப்பகுதியில் திடீர் புகைமூட்டமும் போக்குவரத்து முடக்கமும் ஏற்பட்டது. இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியதாக அங்கிருந்த நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து லண்டன் மாநகரக் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதசாரிகளுக்கான பிரத்தியேக மண்டலமாக மாற்றப்பட்டுள்ள இந்தச் சாலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகளைப் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ஆக்ஸ்போர்டு வீதியில் நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விதியை மீறி வாகனங்களை இயக்கும் நபர்கள் மற்றும் குழப்பத்தை விளைவித்தவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லண்டன் போக்குவரத்து நிர்வாகம் எச்சரித்துள்ளது.