சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான பழமையான குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்காக அண்மையில் டெண்டர் கோரப்பட்டது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகவே இந்தக் குடியிருப்புகள் இடிக்கப்படுவதாகத் தகவல்கள் பரவின. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் உள்ளூர் மீனவ பஞ்சாயத்து சபையினர் கவலை மற்றும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பட்டினப்பாக்கம் குடியிருப்பு அகற்றம் குறித்த உண்மை நிலையைத் தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, பட்டினப்பாக்கத்தில் 1968-ஆம் ஆண்டு கட்டப்பட்ட 96 வாடகைக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அவற்றைக் காலி செய்யக் கோரி 2022-ஆம் ஆண்டே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குடியிருப்புவாசிகளுக்கு மாற்றுக் குடியிருப்புகள் வழங்குவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் வீட்டு வசதி வாரியத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே இடிப்புப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களின் பலவீனம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கும் இந்த இடிப்பு நடவடிக்கைக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
தற்போது பழுதடைந்த கட்டடங்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தொடக்கக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டடங்கள் அகற்றப்பட்ட பின்னர், அப்பகுதியின் எதிர்காலப் பயன்பாடு குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகளை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.