தமிழ்நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினைகள் தொடர்பாகப் பிரபலப் பின்னணிப் பாடகர் சீனிவாஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மின்சாரத் துறை மற்றும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள அதில், மின்வெட்டு மற்றும் வோல்டேஜ் மாறுபாடு (Fluctuations) போன்ற சிக்கல்களை வெறும் பேச்சோடு நிறுத்தாமல், அரசு தற்போதாவது தீவிரமாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நான் வசிக்கும் பகுதியில் முந்தைய ஆட்சியின் போதே மின்சார நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருந்தது என்றும், ஆனால் தற்போதைய ஆட்சியில் அது இன்னும் மிக மிக மோசமாக (Atrocious) மாறிவிட்டது என்றும் பாடகர் சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் முதலமைச்சர் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது, எனவே நல்லதே நடக்கும் என நம்புகிறேன் என்றும் தனது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்துப் பல்வேறு தரப்பினரும் பொதுவெளியில் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் சீனிவாஸின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயனாளர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனிடையே, அவர் குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட மின்சாரப் பிரச்சினையைச் சீரமைக்கத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.