பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோரஸ்பி துறைமுகப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 32 கிலோ எடையுள்ள இராணுவ ரக பீரங்கி குண்டு தொடர்பாக நான்கு சீனப் பிரஜைகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து போர்ட் மோரஸ்பியில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அது பீரங்கி குண்டு வடிவில் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண ஒயின் பாட்டில் என்றும், அதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், சீனாவிலிருந்து பீரங்கி குண்டுகளைக் கடத்துவது சாத்தியமற்ற ஒன்று என்றும் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பப்புவா நியூ கினியா காவல்துறையினர் மேற்கொண்ட எக்ஸ்ரே பரிசோதனையில், அது வெடிக்காத 130 மிமீ எக்ஸ்புளோசிவ் ஃபியூஸ் கொண்ட சீன டைப் 59 (Type 59) பீரங்கி குண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 32 கிலோ எடையில் ஒயின் பாட்டில் எப்படி இருக்க முடியும் எனச் சமூக வலைதளங்களில் பலரும் சீன தூதரகத்தின் விளக்கத்தைக் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியலில் கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட இராணுவ வெடிபொருளைப் பப்புவா நியூ கினியா நாட்டின் பாதுகாப்புப் படையினரும் வெடிபொருள் நிபுணர்களும் கைப்பற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சீனா தனது தூதரக அதிகாரிகள் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.