பிரான்ஸ் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வைக் கண்டித்துப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டங்கள் திடீரென வன்முறையாக மாறியது. பாரிஸ், மார்செய்ல், லியோன் மற்றும் லிமோஜஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட போராட்டக்காரர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகராட்சி கட்டிடங்களைச் சூறையாடித் தீக்கிரையாக்கினர். இச்சம்பவங்கள் தொடர்பாக பிரான்ஸ் நாடு முழுவதும் இதுவரை சுமார் 2,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் அமைதியான போராட்டங்களைத் ‘தீவிர இடதுசாரி’ (Ultra-left) தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளனர். மேலும், முகமூடி அணிந்த சில வன்முறை கும்பல்கள் திட்டமிட்டு அரசுக் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் பிரான்ஸில் 5G தொலைத்தொடர்பு கோபுரங்களைத் தகர்த்த வழக்குகள் மற்றும் வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக முகாமமிட்டு வாழ்ந்த தீவிர சுற்றச்சூழல் அமைப்பினருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவசரக்கால பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகப் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இத்தகைய வன்முறைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான், அமைதியைச் சீர்குலைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாரிஸ் மற்றும் நைஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் ஆயிரக்கணக்கான காவல்துறையினரும் கூடுதல் பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.