Posted in

மாணவர் ஹென்றி நோவாக் கொலை வழக்கு: விக்ரம் திக்வாவின் சிறை தண்டனையை உயர்த்தியது பிரிட்டன் நீதிமன்றம்!

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த 18 வயது மாணவர் ஹென்றி நோவாக் என்பவரை விக்ரம் திக்வா (Vickrum Digwa) என்ற 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். சீக்கிய சமய வழிபாட்டு உரிமையின்கீழ் வைத்திருந்த 21 சென்டிமீட்டர் நீளமுள்ள வழிபாட்டு கத்தியை பயன்படுத்தி இக்கொலைச் சம்பவத்தை திக்வா அரங்கேற்றினார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய கீழ் நீதிமன்றம், திக்வாவுக்கு ஆயுள் தண்டனையுடன் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2026 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

எனினும், தற்காப்பற்ற நிலையில் இருந்த மாணவரைக் கொடூரமாகக் தாக்கியது மற்றும் அவர் உயிருக்குப் போராடியபோது வீடியோ பதிவு செய்து கேலி செய்தது போன்ற தீவிரக் குற்றச்சாட்டுகளுக்கு இந்த தண்டனை போதுமானதாக இல்லை என அட்டர்னி ஜெனரல் எலி ரீவ்ஸ் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், கீழ் நீதிமன்றம் அளித்த 21 ஆண்டு தண்டனை மிகவும் குறைவானது என சுட்டிக்காட்டினர். மேலும், திக்வா தரப்பில் தண்டனையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவரது குறைந்தபட்ச சிறை தண்டனையை 25 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பை ஹென்றி நோவாக்கின் குடும்பத்தினரும் சவுத்தாம்ப்டன் பகுதி காவல் துறை அதிகாரிகளும் வரவேற்றுள்ளனர்.

கத்திச் சட்டம் மற்றும் சமய ரீதியான விலக்குகளைத் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான விவாதங்கள் பிரிட்டனில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திக்வா தனது 25 ஆண்டுகால தண்டனைக் காலத்தை முடிக்கும் வரை பிணையில் வர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.