Posted in

எடப்பாடி பழனிசாமி திருப்பதி பயணம்: சொகுசு காரில் வந்து சுவாமி தரிசனம்!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவருக்குத் தேவஸ்தான நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, சுவாமி படம் மற்றும் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி மரியாதைகள் செய்யப்பட்டன. இந்த ஆன்மீகப் பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி வந்திறங்கிய புதிய சொகுசு வாகனம் அரசியல் வட்டாரத்திலும் ஊடகங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

அவர் திருப்பதி பயணத்திற்காகப் பயன்படுத்திய புதிய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) காரின் சந்தை மதிப்பு சுமார் ரூ.99 லட்சம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய காரில் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே (Apple CarPlay), ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் மெரிடியன் ஆடியோ சிஸ்டம் போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. நீண்ட தூரப் பயணங்களுக்கு உகந்த வகையில் பாதுகாப்பு மற்றும் பயண வசதிகள் இந்த வாகனத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமிக்குக் கோயிலின் வெளியே திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பதி தரிசனத்தை நிறைவு செய்த பின்னர், எடப்பாடி பழனிசாமி தனது புதிய வாகனத்தில் தமிழகம் நோக்கிக் புறப்பட்டுச் சென்றார்.