தென் அமெரிக்க நாடான பெருவின் லிமா நகரில் உள்ள ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், சுமார் 3,000-க்கும் அதிகமான டாரன்டுலா (Tarantula) ரக சிலந்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனிக்குச் செல்லவிருந்த இரண்டு ஜெர்மன் குடிமக்கள் மற்றும் ஒரு போலந்து குடிமகனின் பயணப் பைகளில் இந்த சிலந்திகள் காலுறைகளுக்குள் (Socks) மறைத்து வைக்கப்பட்ருந்தன. ரகசியத் தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது பைகளில் அசாதாரண அசைவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.
பெரு நாட்டின் தேசிய வனவிலங்கு சேவை அமைப்பான ‘செர்ஃபார்’ (SERFOR) அதிகாரி கோரா சுவாரஸ் கூறுகையில், ஒவ்வொரு பயணப் பையிலும் 15 முதல் 22 காலுறைகள் வரை அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். காலுறைகளுக்குள் சிலந்தி முட்டைகள், குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பெரிய சிலந்திகள் என பல்வேறு நிலைகளில் உள்ள டாரன்டுலாக்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐரோப்பாவில் ஒரு டாரன்டுலா சிலந்தியின் விலை சுமார் 500 யூரோ வரை விற்பனையாகக்கூடும் என்றும், இந்த ஒட்டுமொத்த சட்டவிரோத கடத்தலின் மதிப்பு 1.5 மில்லியன் யூரோக்கள் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரிய வண்ணங்கள் மற்றும் பெரிய அளவிலான சிலந்திகளுக்கு ஐரோப்பிய சேகரிப்பாளர்களிடையே அதிக தேவை இருப்பதால் இவை கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான சிறப்புப் பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட மூன்று வெளிநாட்டுப் பயணிகளையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து டாரன்டுலா சிலந்திகளும் பாதுகாப்பாகப் பெரு வனவிலங்கு அதிகாரிகளின் பராமரிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோத கடத்தல் கும்பலின் பின்னணி குறித்துப் பெரு நாட்டின் சுங்க மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.