தமிழ்நாடு அரசிற்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நவம்பர் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார் முன்னிலையில் எல்காட் (ELCOT) நிறுவனம் மற்றும் ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) ஆகிய அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இப்புதிய திட்டம் மாநிலத்தின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, புதிய ஏ.ஐ தரவு மையத்தை அமைப்பதற்கான திட்டக் கண்காணிப்புப் பிரிவாக (Project Monitoring Unit) ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் நிறுவனம் செயல்படும். மாநிலத் தரவு மையத்தின் (State Data Center) தற்போதைய நிலையை ஆய்வு செய்வதுடன், அரசின் பல்வேறு செயலிகளைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப (AI-ready) மாற்றுவது இதன் முக்கியப் பணியாகும். மேலும், அரசுச் செயலிகளை புதிய தரவு மையத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான விரிவான திட்ட வரைபடமும் தயாரிக்கப்படவுள்ளது.
ஒப்பந்தக் கையெழுத்து நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், எல்காட் மேலாண்மை இயக்குநர் பி. விஷ்ணுசந்திரன் மற்றும் ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம். ஜே. சங்கர்ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசின் சேவைகளை வேகமாகவும் துல்லியமாகவும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க இந்தத் தொழில்நுட்ப மாற்றம் உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திட்டக் கண்காணிப்புப் பிரிவு தனது முதற்கட்ட கள ஆய்வுகளையும் தரவு மதிப்பீடுகளையும் தொடங்கவுள்ளது.
பல்வேறு அரசுத் துறைகளின் செயலிகள் படிபடியாக ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு உகந்தவாறு மாற்றப்பட்டு, புதிய தரவு மையத்தில் ஒருங்கிணைக்கப்படும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.