Posted in

மேகதாதுவில் அணை கட்ட யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்!

கர்நாடக மாநிலத்தின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹசனம்பா கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது குறித்துப் பேசினார். கர்நாடகா தனது சொந்த எல்லைக்குள் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உரிமை அளித்துள்ளதால், இத்திட்டத்திற்கு யாரிடமும் தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேகதாது நீர்த்தேக்கத் திட்டமானது பெங்களூருவின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, 400 மெகாவாட் மின் உற்பத்திக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நிபந்தனையைத் தங்களின் அரசு சரியாகப் பின்பற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அணை கட்டுவதற்காக சுமார் 5,400 ஹெக்டேர் வனப்பகுதி மூழ்கவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக வேறு இடங்களில் நிலத்தை வனத்துறைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதிக்குப் பின்னரே அடுத்தகட்ட பணிகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையே காவிரி நீருக்காகச் சண்டையிடும் காலம் முடிந்துவிட்டது என்றும் சட்டத்தை மதித்து இரு மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படாது என்பதால், நேரில் வந்து நிலைமையைப் பார்வையிட ஒரு குழுவை அனுப்பி வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் மேகதாது திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இத்திட்டத்திற்கான மாற்று நிலப் பணிகள் நிறைவடைந்ததும், மத்திய நீர் ஆணையத்தின் இறுதி ஒப்புதலுக்காகக் கர்நாடக அரசு விண்ணப்பிக்கவுள்ளது.

அதேவேளையில், மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் காவிரி ஆற்றுப் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படும் எனக் கூறித் தமிழ்நாடு அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்புத் தொடர்ந்து வருகிறது.